Sep 28, 2013

************************

இதோ
இப்போ கூட
அவளை நினைத்தபடியே
கிடக்கின்றேன்.

இன்னும் கொஞ்ச நேரம்தான் -
கடமையை  முடித்துவிட்டு
நிலவும் கிளம்பிவிடும்,
அடிவானம் சிவந்து
வெளிச்சமும் வெளிவந்துவிடும்.

தூக்கமின்றி சிவந்த விழிகளுடனும்,
அவளின்றி இருண்ட முகத்துடனும் - நான்

என்
இன்னுமொரு பொழுதின்
ஆரம்பத்தில்..!

Sep 26, 2013

************************

அவளை மறந்துவிட்டதாய்
நடித்துக்கொண்டிருக்கிறது
என் மனது -
உள்ளுக்குள் அழுதுகொண்டே..!

Sep 14, 2013

************************

இன்றாவது
என் பார்வையில் அவள் தென்படக்கூடும்
என்னும் தேடலிலேயே தொடங்குகிறது
அவளில்லா என் எல்லாப் பொழுதுகளும்.

மீண்டும் ஒருமுறை
அவளை சந்திக்கும்வரை
என் இம்முயற்சிகள்
முடியப்போவதுமில்லை.

என்றோ ஒருநாள்
இப்பிரிவின் கடைசிப்பக்கத்தில்
நானும் அவளும்
முட்டிக்கொள்வோம்.

அன்று -
உள்ளுக்குள்
அழுதுகொள்ளப்போவது 
நிச்சயம்.

நானும்;
என்போல் அவளும்..!

Sep 11, 2013

************************

அடிக்கடி என்கனவில்
வந்துபோவதுதான்
அவளுடனான
சில நெருக்கக் காட்சிகள்.

கண்விழித்தும்
கலைந்து போகாக் கனவுகளில்
நீண்டு செல்வதுண்டு
ஒருசில வினாடிகள்.

விழியிலிருந்து வடியும்
அன்றைய ஆரம்பக் கண்ணீரில்
கண்ட கனவும்
மெல்லக் கரையும் -
அவள் நினைவுகளோ
விழித்தெழுந்துகொள்ளும்.

ஏனோ -
அவள் பிரிந்த பின்னும்
அவளால் ஆன இக் காதலை மட்டும்
இன்னும் இழுத்துப்பிடித்துக்கொண்டுதானிருக்கின்றது
கிறுக்குப் பிடித்த இவ்விதயம்.

Aug 28, 2013

************************

கடந்த சில வருடங்களாக எனக்கும் என் ஊருக்கும் இடையிலான நெருக்கம் குறைந்துகொண்டுதான் வருகின்றது. கொஞ்ச காலம் கொழும்பில், இப்போ வெளிநாட்டில். என் ஊரில் நிறையப்பேர் என்னை மறந்திருப்பார்கள், எனக்கும் நிறைய முகங்கள் மறந்து விட்டன என்பதும் உண்மைதான். 
படிப்பும் பணமுமாய் அலைந்துதிரியும் வாழ்வில் சிக்குண்டு தன் மண்வாசனை மறந்த மனிதர்களின் பட்டியலில் என்  பெயரும் அச்சடிக்கப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் என்னுள்ளும்.


"சொர்கமே என்றாலும்.... அது நம்மூர போல வருமா...." 
எங்கோ ஒலித்துக்கொண்டிருக்கிறது இளையராஜாவின் பாடல்..!

Aug 27, 2013

************************

பணம் தேடி கடல் கடந்து வெளிநாடு வந்தேன், இருந்ததை இழந்துவிட்டு. திரும்பிப் பார்க்கும் போதுதான் அங்கிருந்து அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர முடிகிறது. எல்லாத்தையும் விட்டு விட்டு நம்ம ஊருக்கே சென்று விடு என்று மனசு சொன்னாலும்; பொருளாதார நிலைமையும், என்னில் வந்து ஒட்டிக்கொண்ட சில பொறுப்புக்களும் இங்கேயே இருந்துவிட நிர்ப்பந்திக்கின்றது. 

பெறுமதி என்பது பணம் சார்ந்தது மட்டுமல்ல என்பதை இழந்துவந்த ஒவ்வொன்றும் ஞாபகப்படுத்திகொண்டுதானிருகின்றன..!

Aug 26, 2013

************************

ஐந்து பேர் கொண்ட
அளவான அறை.

புரிந்துணர்வுகளுடன்  பூத்துக் குலுங்கும்
அழகழகான நட்பு.

உன்னுடன் பேசமுடியா துயரத்தில் 
ஓரமாய் நிற்று அழும் என் மனம்.